ஒரு சமூக வலைப்பின்னல் என்பது உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்களுடன் தொடர்பில் இருப்பதற்கும் புதிய நண்பர்களை உருவாக்குவதற்கும் பயன்படுகிறது. சமூக வலைப்பின்னல்கள் பயன்படுத்த வேடிக்கையாகவும், வேலை தேடுவதற்கு உதவியாகவும், நண்பர்கள், வணிக தொடர்புகள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருப்பதற்கும், எதையும் எங்கும் பகிர்ந்து கொள்வதற்கும் சிறந்தது. பெண்கள் பொதுவாக சமூக வலைபின்னல் தளங்களைப் பயன்படுத்தி நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும், சக ஊழியர்களுடனும் தொடர்பு கொண்டு அவர்களின் அனுபவத்தை, அறிவையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளகின்றனர்.   ஒருவருக்கொருவர் தாய்மை குறித்து ஆதரவளிப்பது, தொழில் குறிக்கோள்களை பூர்த்தி செய்வது, ஒருவருக்கொருவர் ஊக்கமளிப்பது, தன்விருப்பத்தை ஒத்தோரை கண்டுபிடிப்பது போன்ற செயல்களுக்கும் இத்தளங்களை பெண்கள் பயன்படுத்தலாம்.

பெண்கள் ஒரு பெற்றோராக, தொழில் வல்லுநராக அல்லது பொது பயனராக இருக்கலாம். அவர்கள் சமூக வலைப்பின்னல் தளங்களின் உதவியுடன் உலகத்துடன் இணைந்து மிகவும் பயனுள்ள தகவல்களை பெற முடியும். அவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து மற்றவர்களுக்கு உதவ முடியும் மற்றும் பிறரின் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள முடியும். மேலும், ஒரு நல்ல சிந்தனை ஒரு பெரிய நெட்வொர்க் மூலம் பல மக்களை சென்றடைய முடியும். தொழில்முனைவோராக இருக்கும்  பெண்கள் சமூக வலைப்பின்னல் மூலம் தங்கள் வணிகத்தை பரப்புவதன் மூலம் அவர்கள் அதிக லாபத்தைப் பெறலாம். ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற பல சமூக வலைப்பின்னல் தளங்களை பெண்கள் பயன்படுத்தலாம்.

தனியுரிமை சிக்கல்கள்:

பின்வரும் சில தனியுரிமை சிக்கல்களை நீங்கள் புறக்கணித்தால் உங்களுக்கு ஆபத்து ஏற்படலாம்

  • உங்கள் புகைப்படங்களையும் செயல்களையும் பொதுவில் பிகிர்வது.
  • உங்கள் பதிவில் உங்கள் இருப்பிடத்தை பகிர்வதால் ஏமாற்றுக்காரர்கள் உங்களின் இருப்பிடத்தை பின்தொடர வாய்ப்பு ஏற்படுத்துவது.
  • சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது, சரியாக அறிந்திராத நபர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்வது ஆபத்தை உண்டாக்கும்.

ஆபத்துக்கள் மற்றும் சவால்கள்

போலி நண்பர்கள்:

நீங்கள் தனிப்பட்ட முறையில் சரியாக அறிந்திராத நபரை நண்பராக ஏற்றக்கொள்ளும்போது, அவர்கள்

  • உங்களின் புகைப்படங்களை திருட முடியும் அல்லது உங்களின் செயல்பாடுகளை இரகசியமாக கண்காணிக்க முடியும்.
  • தனிப்பட்ட நன்மைக்காக உங்களின் அடையாளத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உங்களின் பெயரில் ஒரு போலியான சுயவிவரத்தை உருவாக்க முடியும்.
  • அவர்கள் உங்களை மனரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ அச்சுறுத்தலாம் அல்லது இழிவுபடுத்தலாம்.

அடையாள திருட்டு:

நீங்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்பொழுது முன்பின் அறியாத நபரை நண்பர்களாக் ஏற்றுகொள்ளும்போது அடையாள திருட்டு நிகழக்கூடும். ஏமாற்றுக்காரர்கள்

  • உங்களின் முக்கியமான தனிநபர் தகவல்களை திருடக்கூடும்.
  • உங்களின் அடையாளத்தில் ஆள்மாறாட்டம் செய்து பணம் சம்பாதிக்கக்கூடும்.

தவறான, மோசமான, அல்லது பொருத்தமற்ற மொழியை பயன்படுத்துவது:

மோசமான, அறுவெறுக்கத்தக்க அல்லது பொருத்தமற்ற மொழிகள்தான் பெண்கள் இன்று எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை. பல போலி நண்பர்கள் உங்களுடன் மோசமான தலைப்புகளைப் பற்றி பேசலாம். அவர்கள் உங்களை

  • மனரீதியாகவோ அல்லது உணர்வுரீதியாகவோ துன்புறுத்தலாம்.
  • விரும்பத்தகாத வார்த்தைகளை உங்களின் பதிவிற்கு அல்லது புகைப்படங்களுக்கு பயன்படுத்தி உங்களை இழிவுபடுத்தலாம்.

அதிகமான தகவல்களைப் பகிர்வது:

  • உங்கள் வீடு / அலுவலக முகவரி, குடும்ப உறவு, தொலைபேசி எண் போன்ற கூடுதல் தகவல்களைப் பகிர்வது  உங்களுக்கு ஆபத்தாக இருக்கலாம். மோசடிகாரர்கள் உங்களைப் பின்தொடரலாம் அல்லது துன்புறுத்தலாம்.

ஸ்பேம் இ-மெயில்கள்:

ஸ்பேம் இ-மெயில் என்பது ஒரு பொருளின் விளம்பரத்தைக் கொண்டிருக்கும் தேவையற்ற இ-மெயில். இது பயனர்களின் சந்தேகமின்றி அவர்களின் தகவல்களை சேகரிக்க, பல இ-மெயில் குழுக்களுக்கு அனுப்பப்படும்.

அவர்கள் அனுப்பும் ஸ்பேம் இ-மெயில்

  • சில ஆன்லைன் ஷாப்பிங் தயாரிப்புகள் பற்றியோ, சுகாதார காப்பீடு பற்றியோ இருக்கலாம். இது உங்களை ஆபத்தில் சிக்கவைக்கும்.
  • போலி வேலை நேர்காணல்களுக்காக இருக்கலாம்
  • வீட்டு உபகரணங்களுக்கான சில சிறப்பு சலுகைகளாக இருக்கலாம்.

நீங்கள் இந்த ஸ்பேம் இ-மெயில்களில் வரும் லிங்குகளை க்ளிக் செய்தால் ஏமாற்றுக்காரர்கள் உங்களின் முக்கிய தகவல்களைக் திருடக்கூடும். 

போலி விளம்பரங்கள்

ஸ்கேம்மர்கள் தங்களின் போலி விளம்பரங்களை அனுப்ப பெரும்பாலும் சமூக வலைதளங்களையே பயன்படுத்துகின்றனர். அவர்கள் உங்களை குறிவைத்து உங்களின் முக்கிய தகவல்களை பின்வரும் வழிகளில் திருட முடியும்.

  • உண்மை போன்று தோற்றமளிக்கும் ஒரு போலி விளம்பரத்தை தொடர்ந்து ஒரு தீங்கிழைக்கும் லிங்கை அனுபுவர். நீங்கள் அந்த லிங்கை கிளிக் செய்தால் உங்களின் முக்கிய தகவல்கள் ஆபத்துகுள்ளாகும்.
  • போலி செயலிகள் மற்றும் சேவைகளை நீங்கள் நிறுவினால், அவற்றின் மூலமும் உங்களின் முக்கிய மற்றும் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் திருடக்கூடும்.

சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது பெண்கள் செய்ய வேண்டியது என்ன?

  • சமூக வலைதளங்களில் ஒரு கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு அந்நபரின் நம்பகத்தன்மையை எப்போதும் சரிபார்க்கவும்.
  • உங்களின் புகைப்படங்கள் மற்றும் செயல்பாடுகளை உங்கள் குடும்பத்தினர் மற்றும் தெரிந்த நண்பர்களுடன் மட்டும் பகிருமாறு தனியுரிமை அமைப்புகளை வைத்திருங்கள்.
  • ஒரு சமூக வலைதளத்தை தேர்ந்தெடுக்கும் போது, உங்களின் தனியுரிமை சிக்கல்களை கருத்தில் கொண்டு உங்கள் பதிவுகளை இடுவது, சாட் செய்வது, பதிவேற்றம் அல்லது பதிவிறக்கம் செய்வதை தொடருங்கள்.
  • உங்களின் தந்தை/கணவர்/சகோதரர் அல்லது ஏதோ ஒரு குடும்ப உறுப்பினரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் நீங்கள் சமூக வலைதளத்தில் அறிந்த நபரை சந்திக்க செல்லுங்கள். ஏனெனில் அவர்கள் உங்களுக்கு சில பரிந்துரைகளை வழங்கலாம். மேலும் நீங்கள் யாரை சந்திக்கிறீர்கள் என்பதை எப்போதும் அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
  • உங்கள் சமூக வலைப்பின்னல் கணக்கு விவரங்கள் சமரசம் அல்லது திருடப்பட்டதாக நீங்கள் நினைத்தால், உடனடியாக உங்கள் சந்தேகங்களை வலைபின்னல்தளத்தின் ஆதரவு குழுவுக்கு தெரிவிக்கவும்.
  • உங்களின் சுயவிவரத்தில் வரும் மோசமான கருத்துக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டாம்.

சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது பெண்கள் தவிர்க்க வேண்டியவை:

  • உங்கள் பெயர், நிறுவனத்தின் முகவரி / வீட்டின் முகவரி, தொலைபேசி எண்கள், வயது, பாலினம், கிரெடிட் கார்டு விவரங்கள் போன்ற எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் கொடுக்கவோ பதிவிடவோ வேண்டாம்.
  • யாருக்கும் உங்கள் பாஸ்வோர்டை வழங்காதீர்கள்
  • உங்கள் நண்பர்கள் பற்றிய தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிடவேண்டாம். இது அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்ககூடும்.
  • நீங்கள் அறியாத நபரிடம் வெப்கேமை பயன்படுத்தவேண்டாம்.
  • நெட்வொர்கிங் தளங்களில், உங்ளின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை பதிவிடுவதை தவிர்க்கவும்.
  • சமூக வலைதளங்களில் உங்களுக்கு வரும் லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம். அந்த வலைதளங்களை நீங்கள் பார்க்க வரும்பினால் உண்மையான வலைதளங்களுக்கு நேரடியாக செல்லுங்கள்.

சமூக வலைப்பின்னல் தளங்களில் உங்கள் தனியுரிமை அமைப்புகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

சமூக வலைதளங்கள் இயல்பாகவே அனைவரும் பார்க்கும் வண்ணம் அமைந்திருக்கும். ஆனால் அவர்கள் உங்களின் பாதுகாப்பிற்காக பல தனியுரிமை அமைப்புகளை வைத்திருக்கின்றனர். அவற்றை நீங்கள் பயன்படுத்தி ஆன்லைன் பிரச்சனைகளிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

  • உங்களின் பதிவுகள் / வீடியோக்கள் / செயல்கள் போன்றவற்றை அந்நியர்களுக்கு தடுத்து உங்கள் தொடர்பு பட்டியலில் உள்ள உறுப்பினர்களுக்கு மட்டும் பகிரமுடியும். இதற்கு உங்கள் தனியுரிமை அமைப்புகளில் உள்ள ஒன்லி மீ” என்ற தேர்வை பயன்படுத்தவேண்டும்.
  • நண்பர் வேண்டுகோள் விருப்பத்தை நீங்கள் முடக்கலாம். எனவே யாராலும் உங்களுக்கு கோரிக்கை அனுப்ப முடியாது.
  • உங்கள் செயல்பாடுகளுக்கு உங்களின் தொடர்பு பட்டியலில் உள்ள உறுப்பினர்கள் மட்டுமே கருத்து தெரிவிக்கவும், பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதை தடுக்கவும் செய்ய முடியும்.
  • அந்நியர்களிடம் இருந்து உங்கள் தனிப்பட்ட / தொழில்முறை தகவலை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
  • நீங்கள் ஆன்லைன் பயன்முறையை முடக்கலாம், எனவே நீங்கள் ஆன்லைனில் எவ்வளவு காலம் இருக்கிறீர்கள் என்பதை யாரும் அறிய முடியாது.

Source:

Page Rating (Votes : 7)
Your rating: